
- 30 சதவீதம் குறைந்த கட்டணத்தில் சாமர்த்தியமாக சொகுசுக் கார் வாங்கப்போகிறோம் என குமரவேலும் அவரது நண்பர்களும் தங்களை பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த, 5 ஆண்டு களவு திட்டத்தை நிறைவேற்றிவிட்டு கம்பீரமாக கம்பி நீட்டினார் நவீன்
ஆசையும் அறியாமையுமே மோசடியின் மூலதனம் என்ற கருத்தை மெய்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறி இருக்கிறது. பல லட்சங்கள் மதிப்புள்ள டொயோட்டா சொகுசுக் கார்கள் 30 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா??? இதை சொல்லிதான் தனது சதுரங்க வேட்டையை அரங்கேற்றி இருக்கிறார் அந்த நபர்.
இதில் ஏமாற்றப்பட்டவர்கள் எல்லாம் எதுவும் அறியாத பாமரர்கள் அல்ல… பந்தாவாக சொகுசுக்கார்களில் பயணிக்க பல் இழித்துக்கொண்டு பல லட்சங்களை பறிகொடுத்தவர்களில் போலீஸ்காரர்களும், வழக்கறிஞர்களும் கூட அடங்குகின்றனர். இவ்வாறு ஏமாற்றப்பட்ட 19 பேர் இழந்த மொத்த தொகை இரண்டே கால் கோடி ரூபாய்.
ஆள் அடையாளம் பார்க்காமல் ஆசைப்பட்டவர்களிடம் எல்லாம் அசந்த நேரத்தில் பணத்தை அபேஷ் செய்தவரின் பெயர் நவீன்… பெயருக்கு ஏற்றார்போல் நவீன முறையில் மோசடிகளை அரங்கேற்றுவதில் வல்லவரான இவரது சொந்த ஊர் பெங்களூரு… தனது திட்டத்தை அரங்கேற்ற அவர் தேர்ந்தெடுத்த இடம் தான் சென்னை.
இதற்காக 2016 ஆம் ஆண்டு கே.கே.நகரில் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்த நவீன், அதற்கு பாரத் பெங்களூரு புட்பால் கிளப் என பெயர் வைத்து, தொழிலதிபர்களை குறிவைத்து பந்தாடத் தொடங்கினார். தொழிலதிபர் போல் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு முக்கியஸ்தர்களுடன் நெருக்கமாக முயன்ற இவரது புட்பால் வலையில் WANTED ஆக வந்து விழுந்தவர் தான் குமரவேல்.
நவீன் சொன்னதையெல்லாம் நம்பி காவல்துறை, சட்டத்துறையில் உள்ள தனது 19 நண்பர்களை குமரவேல் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களையும் தனது வசீகர பேச்சால் வீழ்த்திய நவீன், கார் வாங்கித் தருவதாகக் கூறி முன்பணமாக இரண்டேகால் கோடியை வசூலித்துள்ளார்.
30 சதவீதம் குறைந்த கட்டணத்தில் சாமர்த்தியமாக சொகுசுக் கார் வாங்கப்போகிறோம் என குமரவேலும் அவரது நண்பர்களும் தங்களை பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த, 5 ஆண்டு களவு திட்டத்தை நிறைவேற்றிவிட்டு கம்பீரமாக கம்பி நீட்டினார் நவீன்… கார் இப்போது வரும் அப்போது வரும் என வழிமேல் விழிவைத்து காத்திருந்தவர்கள், ஒரு கட்டத்தில் நவீன் எப்போது வருவார் தேட தொடங்கினர்.
இறுதியாக தாங்கள் ஏமாற்றப்பட்டதை உறுதி செய்த குமரவேல், கடந்த ஆண்டு காவல்துறையை நாடினார். வழக்குப்பதிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், நவீனை செல்போனில் அதிகம் தொடர்புகொண்டவர்களின் பட்டியலை தயார் செய்தது… ஓராண்டு கால தீவிர விசாரணையின் முடிவில் அவர் பெங்களூருவில் சாவகாசமாக சுற்றித் திரிவதை போலீசார் கண்டறிந்தனர்.
பெங்களூரு விரைந்த தனிப்படை நவீனை மடக்கிப்பிடித்து சென்னை அழைத்து வந்தது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்…. மோசடி செய்து கோடிகளை எண்ணிக்கொண்டிருந்த நவீன் தற்போது பேராசையால் சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்… ஆசை வரும்போதெல்லாம் அறிவை பயன்படுத்தினால் இதுபோன்ற சதுரங்க வேட்டைகளில் சிக்காமல் தப்பிக்கலாம்…