வியாபாரிகளை குற்றவாளிகளாக்கிய ஊரடங்கு… சென்னையில் ஒரு ஷாக் கடத்தல் சம்பவம்
கடத்தப்பட்ட ஹக்கீமின் மகன் அப்துல் ஜப்பார், தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர். பழ வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்த அவருக்கு கொரோனா ஊரடங்கு பேரிடியாக அமைந்தது. மற்ற வியாபாரிகளை போல் ஜப்பாரின் தொழிலும் பெரும் நஷ்டமடைய, வீட்டில் இருந்த தங்க நகைகள் அடகு கடையில் ஐக்கியமாகின.

ட்ரிங்… ட்ரிங்… என ஒலித்துக்கொண்டிருந்த போனை எடுத்து யார் எனக் கேட்டார் ஹக்கீம்… மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல்… நான் தான் ஃபர்ஹானா பேசுகிறேன்…. எனது கணவர் தவ்ஃபீக்கையும், உங்கள் மகன் அப்துல் ஜப்பாரையும் ஒரு கும்பல் கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டுகிறது…
ஏதாவது செய்யுங்கள்… எனக் கூற ஹக்கீமுக்கு கையும் காலும் ஓடவில்லை… ஒரு வாரமாக சென்னையின் பல இடங்களில் தனது மகனை தேடி அலைந்த ஹக்கீமின் முயற்சி தோல்வியடைய, கடந்த 27 ஆம் தேதி அமைந்தகரை போலீசில் ஹக்கீம் புகாரளித்தார்… களத்தில் இறங்கியது காவல்துறை…
செல்போன் அழைப்புகளை வைத்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் கடத்தல் கும்பல் திருப்போரூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது… உடனே அந்த இடத்துக்கு விரைந்த போலீசார் கடத்தப்பட்ட அப்துல் ஜப்பார், தவ்ஃபீக் மற்றும் அவர்களின் நண்பர் ஜலீலை மீட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட பெண் உட்பட 10 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். இத்துடன் பிரச்சனை முடிந்துவிட்டது என நினைக்கிறீர்களா?
அதுதான் இல்லை… கடத்தியவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காவல்துறையே எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று காத்திருந்தது… யாரை அப்பாவி என நினைத்து போலீஸ் காப்பாற்றியதோ அவர்களும் மோசடி கும்பல்தான் என தெரியவந்தது. கடத்தப்பட்ட ஹக்கீமின் மகன் அப்துல் ஜப்பார், தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர்.
பழ வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்த அவருக்கு கொரோனா ஊரடங்கு பேரிடியாக அமைந்தது. மற்ற வியாபாரிகளை போல் ஜப்பாரின் தொழிலும் பெரும் நஷ்டமடைய, வீட்டில் இருந்த தங்க நகைகள் அடகு கடையில் ஐக்கியமாகின… ஆனால், விழுந்த வியாபாரம் எழுந்து நிற்கவில்லை… கடன் பல லட்சங்களை தாண்ட என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற அப்துல் ஜப்பார் தனது உறவினரான தவ்ஃபீக்குடன் சேர்ந்து சென்னையில் பழக்கடை தொடங்கப்போவதாக கூறிவிட்டு வந்துள்ளார்…
அப்போதுதான் இருவருக்கும் பெரியகுளத்தை சேர்ந்த ஜலீலுடன் பழக்கம் ஏற்பட்டது… அவர், போலி வைரம் மற்றும் முத்துக் கற்களை உண்மையானது போல விற்றும், குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகவும் மோசடி செய்யலாம் என யோசனை தெரிவித்துள்ளார். கடனில் சிக்கித் தவித்த ஜப்பாரும் தவ்ஃபீக்கும் இதற்கு சம்மதிக்க, பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ஆண்டனி என்பவரை சிக்க வைத்தனர்…
பாலியல் தொழில், கொலை, கடத்தல் உள்ளிட்ட வழக்கு பின்னணி கொண்ட ஆண்டனியும் அவரது நண்பர்களும், அப்துல் ஜப்பாரை செல்போனில் அழைத்து பணம் தயாராக இருப்பதாகவும் மீனம்பாக்கம் வந்து வைரங்களை கொடுத்து விட்டு பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர். அப்போது, வைரங்கள் நெல்லூரில் இருப்பதாக கூறிய ஜப்பார், தங்களிடம் புராதான பொருள் ஒன்று இருப்பதாகவும் அதை வேண்டுமானால் வாங்கிக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
ஜப்பார் அழைத்த இடத்துக்கு தனது காதலி மற்றும் நண்பர்களுடன் சென்ற ஆண்டனி, அங்கு புராதான பொருள் இல்லை என்பதை அறிந்து ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றார்… மோசடி தொழிலுக்கு புதிதான ஜப்பாரும் தவ்பீக்கும் பல்வேறு குற்றப்பின்னணி கொண்ட ஆண்டனி மற்றும் அவரது சகாக்களிடம் வசமாக சிக்கிக்கொண்டனர்…
5 லட்சம் ரூபாய் கொடுத்தால் விட்டுவிடுவதாக கூறிய ஆண்டனி கும்பலிடம் நெல்லூரிலிருந்த மற்றொரு நண்பரும் மோசடிக்கு ஐடியா கொடுத்தவருமான ஜலீலையும் காட்டிக்கொடுத்தனர்… அவரையும் சென்னை கடத்தி வந்த கும்பல், பணம் கேட்டு தவ்பீக்கின் மனைவியை அழைத்ததால் போலீசிடம் வசமாக சிக்கியுள்ளனர்… கொரோனா ஊரடங்கால் ஏற்படும் நெருக்கடி சாதாரணமானவர்களையும் குற்றவாளிகளாக்கும் என அன்று பொருளாதார வல்லுநர்கள் விடுத்த எச்சரிக்கை இன்று மெய்பட்டிருக்கிறது…