
ஜெருசலேம்: பாலஸ்தீன் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து மிருகத்தனமான கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், காசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மின்சாரம் இன்றி ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட 12 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் பாலஸ்தீனின் காசா நகரம் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. வீடுகள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியது போதாதென்று மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல், ஏவுகணை, வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த மக்கள், அங்குள்ள அல் ஷிபா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் துண்டித்தது. நவம்பர் 11 ஆம் தேதி மின்வெட்டு ஏற்பட்டதிலிருந்து, இரண்டு குறைபிரசவ குழந்தைகள் உட்பட 12 நோயாளிகள் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை திங்கட்கிழமை தெரிவித்தது.
காசா சுகாதார அமைச்சகத்தின் அறிக்கைகளின்படி, மூன்றாவது குறைபிரசவ குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மூன்று செவிலியர்கள் கொல்லப்பட்டனர், மேலும் ஆக்ஸிஜன் நிலையம், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஒரு கிணறு, இதய நோய் வசதி மற்றும் மகப்பேறுக் கூடம் உட்பட முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்தன என்று ஐக்கிய நாடுகள் சபை கூறி இருக்கிறது.