கான்ட்ராக்ட் விடுவதுதான் கார்ப்பரேசன் வேலையா? சென்னை மாகராட்சி கூட்டத்தில் விளாசிய மார்க்சிஸ்ட் கவுன்சிலர்

சென்னை: கான்ட்ராக்ட் விடுவதுதான் கார்ப்பரேசன் வேலையா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 98வது வார்டு உறுப்பினர் பிரியதர்ஷினி கேள்வி எழுப்பினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் செவ்வாயன்று (அக்.31) மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆ.பிரியதர்ஷினி பேசியதாவது, “சென்னையில் காய்ச்சல் பரவலாக உள்ளது. பரிசோதித்தால் கூட என்ன காய்ச்சல் என்று தெரியாத நிலை உள்ளது. ஆணையர் கூட கடந்த மாதம் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை. அண்மையில் புளியந்தோப்பு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் கனகவள்ளி என்ற கர்ப்பிணி சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தார்
இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி பல கட்ட போராட்டங்களை நடத்தி, பலமுறை ஆணையரிடம் மனு கொடுத்தது. முதலமைச்சருக்கு பரிந்துரை செய்திருப்பதாக ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளார். இதுபோதுமானதல்ல. ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். மாநகராட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் இத்தகைய பரிதாப மரணங்களை தடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கான்ட்ராக்ட் விடுவதுதான் கார்ப்பரேசன் பணியா? என்று கேட்கும் நிலை உள்ளது. மாநகராட்சியின் அனைத்து பணிகளும் கான்ட்ராக்ட் முறையில் நடைபெறுகிறது.
மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கனகராஜ் என்ற கான்ட்ராகட் தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்தார். அவருக்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது. ஆனால், ஒப்பந்ததாரர் வாயிலாக ரூ50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு மாநகராட்சி கடிதம் அனுப்பியுள்ளது. ஒப்பந்த முறையில் பணியாற்றினாலும், அவரை மாநகராட்சி பணியாளராக கருதி, நிரந்தர ஊழியருக்கு உள்ள அனைத்து நிவாரணங்களையும் அவரது குடும்பத்திற்கு வழங்க வேண்டும்.
சமுதாய நலக்கூடம்
ஏழை மக்கள் எளிதாக பயன்படுத்துவதற்காக சமுதாய நலக் கூடங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், சமுதாய நலக்கூடங்களை கான்ட்ராக்ட் எடுத்துக் கொண்டு, பேக்கேஜ் முறையில் அடாவடியாக லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றனர். இதில் மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மறுவாழ்வு மையம் போதைக்கெதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி, இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோரிடம் மனு அளித்தோம். சென்னை பள்ளிகளுக்கு அருகாமையில் போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது. மாணவர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள். ஆனால், சென்னையில் ஒரு மறுவாழ்வு மையம் கூட இல்லை. எனவே, மண்டலத்திற்கு ஒரு போதை மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும்.
குடிமனைப்பட்டா
மாநகராட்சி பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பட்டா இல்லை. எனவே, 50 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசிக்கும் மக்களுக்கு அரசு பட்டா வழங்க, மாநகராட்சி பரிந்துரை செய்ய வேண்டும். பள்ளிகளில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் (ஓஏ), கணினி உதவியாளர்களுக்கு (சிஏ) அரசாணை 36ன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள உதவி கல்வி அலுவலர்கள் (ஏஇஓ) மண்டல அலுவலங்களிலிருந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலன் சார்ந்து மன்ற உறுப்பினர்கள் வைக்கும் கோரிக்கைகளை அதிகாரிகள் புரிந்து, விரைந்து நிறைவேற்ற வேண்டும். 98வது வட்டத்தில் உள்ள உதவி பொறியாளர் மாற்றுத்திறனாளியாக உள்ளார். அவருக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்.
மழைநீர்
98வது வட்டத்தில் மழைநீர் கால்வாய் பணிகள் 90 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. ஒருசில இடங்களில் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ள நிலையில், மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அம்மா கிளினிக் செயல்பட்ட இடத்தை அங்கன்வாடி மையத்திற்கு ஒதுக்க வேண்டும் அல்லது உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும்.
கழிவுநீர்
லாக்மா நகரில் கழிவு நீர் குழாயை மாற்றி அமைக்க கழிவுநீரகற்று வாரியம் நடவடிக்கையை எடுக்காமல் உள்ளது. அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் நகர் கழிவுநீர் பிரச்சனையை தீர்க்க, கழிவு நீரேற்று நிலையத்தில் கூடுதலாக ஒரு சுத்திகரிப்பு கிணறு அமைக்க வேண்டும். அதற்கான பணிகளையும் தொடங்காமல் உள்ளனர். குட்டியப்பன் தெருவில் 300 வீடுகள் உள்ளன. அந்த தெருவிற்குள் ஆட்டோ கூட செல்ல முடியாது. அவசரத்திற்கு வேகமாக வெளியே வர முடியாது. எனவே அந்த தெருவின் ஒருபகுதி மூடப்பட்டுள்ளதை திறக்க வேண்டும்.
கட்டிட பணி
பாலவாயல் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட நிதி ஒதுக்கியும் தொடங்கப்படாமல் உள்ள பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். கே.கே.நகர் என்றுள்ளதை கலைஞர் கருணாநிதி நகர் என முழுபெயர் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.