பாலஸ்தீனில் 9000ஐ கடந்த பலி.. ரத்த வேட்டையாடும் இஸ்ரேல் – வேடிக்கை பார்க்கும் உலகம்

ஜெருசலேம்: இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீன் மக்களின் எண்ணிக்கை 9,000ஐ கடந்துள்ளது
இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்த நிலங்களை மீட்கவும், பல ஆண்டுகளாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்காகவும், இஸ்ரேல் அல் அக்சா மசூதியின் புனிதத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாக கூறி ஹமாஸ் படை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இதன் காரணமாக நிலைகுலைந்த இஸ்ரேல் பாலஸ்தீனுக்கு எதிராக போரை அறிவித்தது. காசா மீது அந்நாட்டு ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. தங்கள் நாட்டு பிணையக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. அதில் 40 குழந்தைகள் தலை துண்டிக்கப்பட்டதாக பகீர் கிளப்பியது இஸ்ரேல். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பலரும் இதை கூறிய நிலையில் அது தவறான குற்றச்சாட்டு என்பது உறுதியானது.
மாறாக இஸ்ரேல் பிணைக் கைதிகளை அடுத்தடுத்து ஹமாஸ் விடுதலை செய்து வருகிறது. மறுபக்கம் காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது உலகையே உலுக்கியது. இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜோர்டான் கடந்த வாரம் ஐநா பொது சபையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டு வந்தது.
அதில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக 120 நாடுகள், எதிராக 14 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. மறுபக்கம் பாலஸ்தீனின் காசா மீது இஸ்ரேல் கொடூர தரை வழித்தாக்குதலையும், வான் வழித் தாக்குதலையும் தொடர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் காசாவில் உயிர் பலிகள் பல ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகின்றன. போர் தாக்குதல்களால் வீடுகளை இழந்து உயிர் பிழைக்க காசாவில் உள்ள ஜபலியா என்ற அகதிகள் முகாமில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தங்கி உள்ளார்கள்.
இந்த நிலையில் அதன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டி உள்ளது. ஏராளமானோர் இந்த தாக்குதலில் காயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 24 நாட்களில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன் மக்களின் எண்ணிக்கை 9,000 ஐ தாண்டி இருக்கிறது.
மோசமான பாலஸ்தீன் நிலை.. இஸ்ரேல் தாக்குதலால் கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சை தடைபட்டதால் நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 4 நோயாளிகள் அங்கு உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.