தமிழகத்தில் பாஜக வந்துவிடுவதாக கூறி சிறுபான்மையின மக்களை ஏமாற்றி திமுக ஆட்சி செய்து வருகிறது -டிடிவி தினகரன்
தமிழகத்தில் எதிர்க்கட்சிக்கான இடத்தைப் பிடிக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்வதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: தமிழகத்தில் பாஜகவினர் வந்துவிடுவார்கள் என கூறி சிறுபான்மை மக்களையும், தமிழக மக்களையும் ஏமாற்றி வருகின்றனர். எதிர்காலத்தில் திமுக பெரிய தோல்விகளையும், வீழ்ச்சியையும் சந்திக்கும்.
தமிழக மக்களின் சோதனைதான் திமுகவின் சாதனையாகும். திமுகவும், அக்கட்சியினரும் செழிப்பாக உள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு மடியில் கனம் இருப்பதால், வழியில் பயம் ஏற்பட்டுள்ளது. அடிப்பது போல் அடித்துவிட்டு அமைதியாக இருப்பதாக மக்களிடம் ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது. இது, எதிர்க்கட்சியின் தவறான செயல்பாடாகும். தமிழகத்தில் எதிர்க்கட்சிக்கான இடத்தை பிடிக்க பாஜக முயற்சி செய்கிறது.
உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்துவந்த மாணவர்களின் கல்வி தொடர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பால், சமையல் காஸ் விலை உயர்வு என்பது, வாக்களித்த மக்களுக்கு கொடுக்கும் பரிசு என்கிற தண்டனையாகும். விலைவாசியை கட்டுக்குள் வைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.
இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.