ஜாகிர் கானுக்கு ஏற்பட்ட நிலைதான்.. முஹம்மது ஷமியையும் தூக்கி எறிந்துவிடுவார்கள்

கிரிக்கெட் வீரர்கள் அத்தனை பேரும் நட்சத்திரங்கள் என்றாலும் பந்து வீச்சாளர்கள் அங்கே தொலைதூர நட்சத்திரங்கள். உரிமை மறுக்கப்பட்டவர்கள். ஒரு கிரிக்கெட் அணியின் இரண்டாம் தரக் குடிமக்கள். வேறு வழியே இல்லாதபோது மட்டுமே ஆட்டநாயகன் விருது வழங்கப் பெறுபவர்கள். பழைய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்துவிடுவார்கள், திரும்பச் செய்து விடுவார்கள் என்ப்தற்காக இரண்டு பந்துகளைப் பயன்படுத்துவோம் என்ற தீர்ப்பை எதிர்க்க முடியாத ஊமைகள். பவர்ப்ளே, குறுகிய மைதானங்கள் என்று ஒவ்வொரு முறையும் வஞ்சிக்கப்படும் குரலற்ற இனத்தைச் சேர்ந்தவர்கள்.
மட்டையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு பத்து மட்டைகள் கொண்டு வந்து பந்துக்கேற்ப மாற்றிக் கொண்டு விளையாடும் ஒரு ஆட்டத்தில் ஒரே பந்து அழுக்கடைந்து நைந்து ஈரமாகிப் போனாலும் அதைப் பகிர்ந்து கொண்டு வீசியாக வேண்டிய பந்து வீச்சாளர்கள் பரிதாபமானவர்கள். யோசித்துப் பாருங்கள், யார்க்கருக்கு ஒன்று, கூக்ளிக்கு ஒன்று, பவுன்சருக்கு ஒன்று என்று பந்து வீச்சாளர்கள் பந்துகளை மாற்றிக் கொண்டால் எப்படி இருக்கும். தங்கள் திறமைக்கேற்ற வெவ்வேறு எடையுள்ள பந்தை பயிற்சி செய்து ஒவ்வொரு பந்து வீச்சாளரும் கொண்டு வந்து வீசத் தொடங்கினால் கிரிக்கெட்டின் கடவுள்கள் அடிவயிற்றுக் காப்பானுக்குள் கலகலத்துப் போவார்கள்.
இத்தனைக்குப் பிறகும் ஷமி ஒரு டெண்டுல்கர் போலவோ, கோலி போலவோ கொண்டாடப்பட மாட்டார். விளம்பர நிறுவனங்கள் அவரைத் தேடி ஓடாது. ஜாகீர்கான், ஜவகல் ஸ்ரீநாத் போன்றவர்களைப் போலவே இவரும் மறக்கப்படுவார். யுவராஜும், தோனியும், கோலியும் சச்சினும் நினைவில் கொள்ளப்படும் 2011 உலகக் கோப்பையில் 23 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர்கான் பெரிய பொறுப்பாளர். அவர் பெயர் எழுதப்பட்ட பலகை வீசி எறியப்பட்ட மூலையில்தான் ஷமியும் சென்று சேர்வார். ஆனால் ஒரு போர்வீரனின் பெயர் யாருக்கும் இங்கே தெரியாது. அணி பெற்ற வெற்றியும் அடைந்த பெருமையும் காலம் காலமாக நிலைக்கும். பந்து வீச்சாளர்கள் போர் வீரர்கள்.
எழுதியது – ஷான் கருப்பசாமி