சமூக வலைதளம்தமிழ்நாடுமக்கள்
எங்கள் குடும்பமும் இஸ்லாமியர்களும்! எழுத்தாளர் முத்துக்குமாரின் நெகிழ்ச்சி பதிவு
எங்கள் குடும்பத்தினருக்கு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வடகரை, நீடூர், கிளியனூர், ஆக்கூர், சங்கரன்பந்தல், கொல்லுமாங்குடி, எலந்தங்குடி உள்ளிட்ட ஊர்களில் நட்புகள் அநேகம்.

எழுத்தாளர் ஆர். முத்துக்குமார் பேஸ்புக்கில் எழுதிய பதிவு இது. அதில், “எங்கள் குடும்பத்துக்கும் இஸ்லாமிய நண்பர்களுக்குமான நட்பு நீண்ட நெடியது. மயிலாடுதுறையில் நாங்கள் அதிக காலம் வசித்த தைக்கால் தெருவில் இஸ்லாமியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர்.
அத்தை, மாமா, அண்ணன், அக்கா என்று அழைத்துக்கொண்டு அவர்களோடு அன்னியோன்யமாக இருந்த நாள்கள் அவை. அனார்கலி அத்தையிடம் டியூஷன், சம்ஷாத் அத்தையிடம் டான்ஸ் க்ளாஸ், பாபுரி மாமாவுடன் சைக்கிள் பயணம் என்று எத்தனை நினைவுகள்.
எங்கள் தெரு முனையில் ஒரு பள்ளிவாசல் உண்டு. அந்தப் பள்ளிவாசலைப் புதுப்பித்தபோது எங்கள் தெருவை அடைத்து பந்தல் போட்டிருந்தார்கள். சுமார் ஒரு மாத காலத்துக்கு எங்கள் தெருவே நிழல் பூத்து இருந்தது. நான் சைக்கிள் கற்றுக் கொண்டது அந்த ஒரு மாத காலத்தில்தான். விழுந்து, எழுந்து, காயம்பட்டு கற்றுக்கொண்டேன், எல்லோரையும் போல. ஆனால் வெயில் படாமல்.
எங்கள் குடும்பத்தினருக்கு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வடகரை, நீடூர், கிளியனூர், ஆக்கூர், சங்கரன்பந்தல், கொல்லுமாங்குடி, எலந்தங்குடி உள்ளிட்ட ஊர்களில் நட்புகள் அநேகம். ஆனால் சென்னை வந்தபிறகு அந்த உறவுகளைத் தொடரமுடியவில்லை. ஆனால் அவர்களோடு அம்மா இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார்.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.