பாலஸ்தீன் பத்திரிகையாளரை குடும்பத்தோடு கொன்ற இஸ்ரேல்.. காசாவில் 11 பேர் துடிதுடிக்க மரணம்

ஜெருசலேம்: இஸ்ரேலிய விமானப் படைத் தாக்குதலில், தெற்கு காஸாவில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன தொலைக்காட்சியின் நிருபரான முகமது அபு ஹத்தாப் வியாழக்கிழமை கான் யூனிஸில் உள்ள அவரது வீட்டில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டதாக வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. CPJ கருத்துப்படி, இந்த மோதலின் போது கொல்லப்பட்ட 36வது பத்திரிகையாளர் அபு ஹதாப் ஆவார். இதில் 31 பேர் பாலஸ்தீனியர்கள். நான்கு பேர் இஸ்ரேலியர்கள் மற்றும் ஒருவர் லெபனானை சேர்ந்த நிருபர். அபு ஹதாபின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அவரது மனைவி, மகன் மற்றும் சகோதரர். கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஹதாபின் சக ஊழியர் சல்மான் அல்-பஷீர், தனது பாதுகாப்புக் கருவியை அகற்றிவிட்டு, “இனி எங்களால் தாங்க முடியாது, நாங்கள் களைத்துவிட்டோம். நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். எங்களுக்கு இடையே உள்ள ஒரே வித்தியாசம் மரண நேரம் மட்டுமே. நாங்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுகிறோம். காஸாவில் நாம் அனுபவிக்கும் பேரழிவை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. யாருக்கும் அல்லது எதற்கும் பாதுகாப்பு இல்லை.
இந்த கியரும் ஹெல்மெட்டும் பத்திரிகையாளரை பாதுகாப்பதில்லை. எல்லாம் வெறும் வெற்று கோஷங்கள். நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். நாங்கள் மரணத்திற்காக காத்திருக்கிறோம்.” என்றார்.
கொல்லப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு வெளியே செய்திகளை சேகரித்து வெளியிட்ட நிலையில், அதே மருத்துவமனையில் அவர் குடும்பத்துடன் இறந்து கிடக்கிறார் என அல் பஷீர் உருக்கமாக பேசினார்.