இந்தியாகட்டுரைகள்மறைக்கப்பட்டவைவரலாறு
தாஜ்மஹாலா? தேஜோ மஹாலயமா? – ஆய்வுகள் சொல்வது இதுதான்
தாஜ்மஹால் கட்டுவதற்கு யமுனை நதியோரம் ஒரு இடம் வேண்டும் என தீர்மானித்த போது ஷாஜஹானுக்கு தங்களது முப்பாட்டனார் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழைய மாளிகையை காட்டி, அதை வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள் என கூறியவர் ஜெய்பூர் மஹாராஜா

தாஜ்மஹால் எப்பவும் தாஜ்மஹால் தான், அது எப்போதும் தேஜோ மஹாலயம் ஆகவே ஆகாது.
இதன் முந்தைய பதிவில் புருஷோத்தம் நாகேஷ் ஓக் என்கிற போலி அறிஞர் (pseudo intellectual) தனது கற்பனையில் உதித்த தேஜோ மஹாலயம் என்கிற கருத்தினை விதைக்க எத்தனை பிரயத்தனப்பட்டார் என்பதை முன்பு படித்தோம் , தற்போது அவர் செய்த மற்ற அசட்டு சதிகளையும் கொஞ்சம் காணலாம்.
தாஜ்மஹால் என்பது ஆதியில் ஒரு சிவன் கோவில் என புருடா விட்டுக்கொண்டிருந்த புருஷோத்தம் அவர்களுக்கு இந்திய வரலாற்றினையும் பழங்கால கட்டடங்களையும் ஆய்தறியும் பணியில் இருந்த ஆங்கிலேயரான கெய்ல்ஸ் டில்லோஸ்டன் வைத்த கேள்விகளாவன:
ஷாஜஹான் ஆட்சியில் நடந்த ஒவ்வொரு விஷயங்களும், ஏன் அன்றாட வாழ்க்கையும் கூட குறிப்புகளாக எழுதப்பட்டு, மினியேச்சர் ஓவியங்களாக வரையப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. ஷாஜஹானின் பாட்ஷாநாமா என்கிற வாழ்க்கை குறிப்பு புத்தகம் நான்கு வெவ்வேறு நபர்களால் எழுதப்பட்டது. அதுபோக அவற்றின் பல பிரதிகள் டெல்லி மியூசியம் உட்பட, லண்டனின் ராயல் மியூசியம் ஆப் வின்ஸரிலும் , அமெரிக்காவின் ஆறு வெவ்வேறு நூலகம்-மியூசியங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. அதில் எதிலிருந்து புருஷோத்தம் ஆதாரம் காண்பிக்க போகிறார் என வினவியிருந்தார்.
தாஜ்மஹால் கட்டுவதற்கு யமுனை நதியோரம் ஒரு இடம் வேண்டும் என தீர்மானித்த போது ஷாஜஹானுக்கு தங்களது முப்பாட்டனார் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழைய மாளிகையை காட்டி, அதை வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள் என கூறியவர் ஜெய்பூர் மஹாராஜா. ஜெய்சிங், இவர் முகலாய ஆட்சிக்குட்பட்ட ஆம்பர் (இப்போதைய ஜெய்பூர்) சமஸ்தானத்து ராஜாவாகவும் முகலாய ராணுவத்தளபதியாகவும் இருந்தவர். தாஜ்மஹால் இருந்த அதே இடத்தில் ஜெய்சிங்கின் அப்பா ராஜா மஹாசிங் கட்டியிருந்த ஒரு மாளிகை மட்டுமே இருந்தது, இவர் தனது அப்பா ஜகத் சிங் மரணத்திற்கு பிறகு தாத்தா ராஜா மான்சிங்கின் பராபரிப்பில் வளர்ந்தவர்.
ராஜா மான்சிங்குக்கு நிறைய மனைவிகளும் அதன்மூலம் நிறைய மகன்களும் இருந்தனர். அவர்களில் திறமைசாலிகளாக மூத்த மகன் ஜகத் சிங்கும், இளைய மகன் பாவ்சிங்கும் இருந்தனர். தந்தைக்கு முன்னதாகவே மகன் இறந்தபடியால் பேரனை அவரே பொறுப்பேற்று வளர்த்தார். அப்படியான தாத்தா ராஜா மான்சிங்குக்கு பேரன் மஹாசிங் கட்டிய ஒரு அரண்மனை தான் தாஜ்மஹால் இருந்த இடத்தில் கட்டப்பட்டு, சிதிலமடைந்து இருந்தது.

அந்த கட்டிடத்தை முகலாய மன்னர் அக்பர் காலத்தில் இருந்து திருமண சம்பந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஜெய்பூர் ராஜா, அக்பர் பேரன் ஷாஜஹானுக்கு விட்டுத்தர நினைத்ததில் வியப்பேதுமில்லை. அக்பருக்கு ஆம்பர் ராஜா பாராமால் தனது மகளை கட்டிக்கொடுத்ததில் இருந்து நிறைய ராஜ்புத் இளவரசிகள் முகலாய அரசிற்கு திருமணம் முடித்து கொடுக்கப்பட்டனர். இவர்களுள் ரத்த உறவு இருப்பது போல முகலாய மன்னர்களிடமிருந்து நிறைய சொத்துக்கள் ராஜபுன ராஜாக்களுக்கு அன்பளிப்பாகவும் இராணுவ சேவைக்காகவும் கைமாற்றப்பட்டது.
இதன் அடிப்படையில் ராஜா ஜெய்சிங் ,ஷாஜஹானுக்கு நெருங்கிய உறவினராக இருந்தார். ஜெய்சிங்குக்கு மிர்ஸா என்ற பட்டத்தை சூட்டி அழகு பார்த்தார் ஷாஜஹான். முகலாய அரச இளவரசர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் ஒரு சிறப்பு பட்டம் மிர்ஸா என்பது. ஷாஷஹானுக்கு கொடுத்த இடத்திற்காக எதையும் எதிர்பாராமல் அதற்கான கைமாறு நிலம் கூட வேண்டாம் என உறுதியாக கூறிவிட்ட ஜெய்சிங் பெருந்தன்மைக்கு அன்பளிப்பாக அவருக்கு தாஜ்மஹால் இடத்தை போலவே நான்கு மடங்கு வெவ்வேறு நிலத்தை அவருக்கு அளிக்க உத்தரவிட்டு அரசாணை இயற்றி வெளியிட்டுள்ளார் ஷாஜஹான்.

அதற்கான பத்திரபதிவுகள், கைமுத்திரையிட்ட தாள்கள் அனைத்தையும் ஆவணமாக சேகரித்து வைத்துள்ளார் கெய்ல்ஸ் டில்லோஸ்டன். அந்த ஆவணங்களை உருதுவில் ஃபர்மான் என்பார்கள்.. தாஜ்மஹாலை எழுதி வாங்கிக்கொண்டு அதற்கு பகரமாக நான்கு நிலங்களை அவருக்கு அன்பளிப்பு செய்ததை இரண்டு ஃபர்மானில் எழுதி இருவரும் கையொப்பு இட்டுள்ளதை கெய்ல்ஸ் சுட்டிக்காட்டுகிறார். இவற்றை பற்றிய விபரங்களை என்றாவது புருஷோத்தம் படித்துள்ளாரா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். (படத்தில் ஃபர்மான்கள் இணைக்கப்பட்டுள்ளன – தாஜ்மஹால் எங்களுக்கு சொந்தம் என பெட்டிசன் போட்ட ஜெய்பூர் இளவரசி தியாவுக்கு இதனை நினைவூட்டூவோம்)
முகலாய அரசர்கள் மற்றும் இந்தியாவின் இஸ்லாமிய ஆட்சியமைப்பு பற்றியும், முகலாய கட்டட்டக்கலை குறித்தும் செங்கோட்டை, தாஜ்மஹால் குறித்து பிரத்யேகமாக படிக்கவரும் அனைத்து வெளிநாட்டு வரலாற்றுத்துறை ஆய்வாளர்களும் மாணவர்களும் முதலில் போய் இந்த விபரங்களை அறிய ஜெய்பூர் மியூசியத்திற்கு தான் படையெடுப்பார்கள் என்பதை எப்படி புருஷோத்தம் அறியாமல் போனார்.
இவை அனைத்தும் போக, ராஜ்புதனர்களின் மாளிகையை எப்படி புருஷோத்தம் புராதன சிவாலயம் என க்ளைம் செய்தார்… அடிப்படை ஆதாரமில்லாத ஒன்றுக்கு எதற்காக வழக்குத்தொடர்ந்தார், இது எதற்கான மோசடி? எனவும் கெய்ல்ஸ் வினவினார்.
இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கவர்னர் ஜெனரலாக (1828-1835 வரை) இருந்த லார்ட் வில்லியம் பென்டிக் என்பவர் தாஜ்மஹாலை விற்று அதில் வரும் பணத்தில் கொல்கத்தாவில் தனக்கான ஒரு பிரம்மாண்ட மாளிகை கட்ட திட்டமிட்டிருந்தார் என பத்திரிகையாளர் ஃபேனி பார்க்ஸ் என்பவர் எழுதியுள்ளார்.
அவரது கூற்றுப்படி தாஜ்மஹாலை வாங்க இருந்தவர் அதை வாங்கி இடித்துவிட்டு அவ்விடத்தில் கோவில் கட்ட இருந்ததாகவும், லார்ட் வில்லியம் தெரிவித்த கூடுதல் தொகை காரணமாக அவரால் வாங்கவியலாமல் போனதும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்துமே அப்போதைய ஐரோப்பிய பத்திரிகையாளர்கள் தங்களது பத்திரிகை விற்பனைக்காக ஏற்றிவிட்ட கட்டுக்கதைகள் என்கிறார் வரலாற்றாசிரியர் பெர்சிவல் ஸ்பியர்.
உலகளவில் வரலாற்று சிறப்புமிக்க இந்த தாஜ்மஹால் குறித்து இப்போதென்றல்ல எப்போதும் ஒரு மர்மம் நிறைந்த கட்டுக்கதை சுற்றியே வந்துள்ளது என்கிறார் இவர். லார்டு வில்லியம் பென்டிக் என்பவரை பெரிய சமூக சீர்திருத்தவாதியாகவும் வாரணாசியில் சதி என்ற பிராமண சடங்கிற்கு எதிராக சட்டமியற்றி அதை ஒழித்தவர் என்றும், குழந்தை திருமணத்தை தடுத்தவர் என்றும் வானளாவ புகழ்ந்திருப்பார்கள். ஆனால் உண்மையில் முகலாய மன்னர்கள் சம்பந்தப்பட்ட பல ஆதாரங்களையும் கோப்புகளையும் திரட்டி அழித்தவர் என்பது தான் உண்மை. இப்போது இந்திய அரசிடம் இருக்கும் தரவுகள் உணவில் தூவப்படும் உப்பு அளவிற்கானது மட்டுமே.
தாஜ்மஹாலுடைய ரகசிய அறைகளை பற்றி கூறவேண்டுமானால் அதனுள் ஒரு காலி டப்பா கூட இல்லை என மனுதாரர்களின் மூக்கை உடைத்துவிட்டது ஏஎஸ்ஐ. இந்திய தொல்லியல் துறையின் கீழ் இருக்கும் தாஜ்மஹாலினுள் அடிக்கடி மராமத்து பணிகள் நடந்துவரும் நிலையில் அவற்றை ரகசிய அறை என கூறுவது வேடிக்கையானது என்றது அலாஹாபாத் நீதிமன்றம்.
1978ல் யமுனை நதியில் வெள்ளம் வரும் வரை அவை ரகசிய அறைகளாக இருக்கவில்லை, மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டு இருந்த ஒன்று தான், அந்த ஆண்டு பெருவெள்ளம் வந்து அவை தாஜ்மஹாலின் கீழ்மட்ட அறைகள் வழியே உட்புகுந்து நீர் நிறம்பிவிட்ட நிலையில், தாஜ்மஹாலின் தரைத்தளத்தில் பின்னால் இருந்த கதவுகளையும் நட்சத்திர வடிவம் பொருந்திய சன்னல்களையும், அப்போதைய அரசு சிமெண்ட் வைத்து பூசி விட்டது. தண்ணீர் புகுந்த காரணத்தால் உள்ளே இருந்த ஓவியங்கள் பலதும் சேதமடைந்துவிட்டது.
ஆனால் அதற்கு முன் ஷாஜஹானும் அவரது குடும்பத்துப் பெண்களும் அந்த அறைகளில் வந்து தங்கியிருந்துவிட்டு செல்வது வாடிக்கையாக இருந்ததாம். யமுனை ஆற்றில் இருந்து வீசும் குளிர் காற்று இந்த சன்னல்கள் வழியே புகுந்து அடிமட்டத்து அறைகளில் ஒரு ஜில்லிப்பினை ஏற்படுத்தும் வகையில் அவை அமைக்கப்பட்டிருந்துள்ளது. இந்த விபரங்களை வரலாற்றாய்வாளர்களான W.E.Begley & Z.A.Desai ஆகியோர் தங்களது Taj Mahal : The Illumined Tomb என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆஸ்திரிய நாட்டைச்சேர்ந்த எப்பா கோச் (Ebba Koch) என்ற பெண்மணி வரலாற்றுக் கட்டடக்கலை ஆராய்ச்சியாளரான இவர் தாஜ்மஹால் கட்டடத்தின் பராமரிப்பு அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் இவர் அங்குள்ள அறைகளை திறந்து பார்த்ததாகவும் அதனுள் யமுனை நதியை நோக்கி 15 அறைகள் கட்டப்பட்டதாகவும், ஏசி கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே குளுகுளு காற்றுவசதி செய்யப்பட்ட அந்த அறைகளை வடிவமைத்த அக்கால கட்டடக்கலை நிபுணர்களை வியப்பதாக கூறுகிறார்.
முகலாய கட்டடக் கலையின் நுணுக்களில் நிலத்தின் மீது கட்டடம் எழுப்பாமல், கட்டடத்தின் வலிமைக்காக இப்படி பாதாளத்தில் Base அமைத்து அதன் மேல் கட்டியுள்ளார்கள். அந்த Basement ஐ கூட உபயோகமுள்ள விஷயங்களுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவ்வாறு அரசு குலத்தவர் கொடும் கோடைகாலங்களில் குளுகுளு வசதியோடு கழிக்கவே இந்த அறைகள் கட்டப்பட்டன, மற்றபடி மீதுமுள்ள சிறிய அறைகளில் உணவு தயாரிப்புக்கான பொருட்களும், படைபரிவாரங்களுக்குமானது என தன்னுடைய Complete Taj Mahal: and the Riverfront Gardens of Agra என்ற புத்தகத்தில் எழுதிய கையோடு தற்போது தாஜ்மாஹால் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில் அவர் வியன்னாவில் இருந்து மீண்டும் பத்திரிகை வாயிலாக இந்திய மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
நீதிமன்றங்களும், ஆர்கியலாஜிகல் சர்வே ஆப் இந்தியாவும், வெளிநாட்டினரும் கைகொட்டி சிரிக்கும் நிலையில் தங்களது பைத்தியக்காரத்தனங்களை வெளிப்படுத்தி வரும் சனாதன பித்தர்களை என்ன சொல்வது. ஏஎஸ்ஐ கூறுவது போல பழமை பொருந்திய கட்டடங்களில் உள்ள பாதாள அறைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே பூட்டி வைக்கவில்லையானால் நம்ம தேசத்து சாராயக்குடிக்கிகளும், மூத்திர குடோன்களும் அதனுள் சென்று என்ன செய்து வைப்பார்கள், சில கையில் சிரங்கு வந்தவர்கள் தங்கள் பெயரையும் காதலி பெயரையும் எழுதி அதில் ஹார்டீன் இட்டு வைப்பார்கள். அதுவே அந்த நினைவுச்சின்னத்தின் அழிவுக்கு போதுமானதாக இருக்கும்.
1761ஆம் ஆண்டில் இந்து மன்னர் சூரஜ் மால் ஆக்ராவை கைப்பற்றிய பின், அரசவை மதகுரு கங்காதர் தாந்தியா என்பவர் தாஜ்மஹாலை கோயிலாக மாற்றிவிடுமாறு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது ( கிபி. 1761ல் ஆப்கான் அரசன் அஹமத்ஷா அப்தலி மற்றும் ராஜஸ்தானின் பகுதியான பரத்பூர் ராஜா சூரஜ்மால் என்பவருக்கும் இடையில் மூண்ட மூன்றாம் பானிபட் போரினை மையமாக வைத்து 2019ல் வெளியான இந்திப்படமான ‘பானிபட்’ படத்தில் சூரஜ்மால் தவறாக அதாவது கொடுரமானவராக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி படத்தை தடை செய்ய சொல்லி இந்திய சினிமா தரச்சான்றிதழ் அமைப்பிற்கு ஆணையிட்டார் ராஜஸ்தான் விளையாட்டுத்துறை மந்திரி விஸ்வேந்திர சிங், அதற்கு ஆதரவு தெரிவித்தார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.
அப்போது அவர் ராஜா ராணிகளை பற்றி படமெடுத்தால் அவர்களின் புகழுக்கு பங்கம் வரும் விதமாக சித்தரிக்க கூடாது என்றார், ஆனா பாருங்க இது முஸ்லிம் மன்னர்களுக்கு மட்டும் பொருந்தாது, தன்ஹாஜி படத்தில் ஔரங்கசேப்பை தவறாக சித்தரிக்கலாம்) ஆக தாஜ்மஹால் மீது இவர்களுக்கு ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சியும் ஆற்றான்மையும் இப்ப நேற்று அல்ல, அது கட்டப்பட்ட காலத்தில் இருந்தே இருந்துவந்துள்ளது. எப்பா கோச் அவர்களால் எடுக்கப்பட்ட தாஜ்மஹாலின் கீழ்மட்டத்து அறைகள் மற்றும் ஷாஜஹான் காலத்தில் தாஜ்மஹால் நிலத்தை வாங்கியதற்கான பத்திரம் ஆகியவற்றை படத்தில் காணலாம்.
-நஸ்ரத் ரோஸி