தலித்துகளை நிர்வாணமாக்கி சிறுநீர் கழித்த சாதி வெறியர்கள் – SDPI கண்டனம்

நெல்லை: பட்டியலின இளைஞர்களுக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு எஸ்டிபை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்படுகையில் கடந்த 30ஆம் தேதி குளிக்கச் சென்ற இரண்டு பட்டிலின இளைஞர்களை தாக்கியும், அவர்களிடமிருந்த செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்தும், நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்தும் அவமதித்த செயல் கடும் கண்டனத்திற்குரியது. வெறிபிடித்த கும்பலிடமிருந்து தப்பிய பட்டியலின இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 6 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் இழிவான மனித தன்மையற்ற இந்த குற்றத்தை போதையால் நிகழ்த்தப்பட்ட சம்பவம் என சுருக்கி விடாமல், குற்றவாளிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, தமிழகத்தில் பட்டியலின சமூக மக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் தீண்டாமை கொடுமைகளை தடுத்து நிறுத்திட உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.