இரண்டு கைகளால் பந்துவீச்சு… ஆஸ்திரேலியாவில் அசத்தும் தமிழ் கிரிக்கெட் வீரர்
கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணியின் நெட் பவுலராக இடம்பிடித்த நிவேதனை, ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியன் டைகர்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

- இரண்டு கைகளிலும் பந்துவீசும் அசாத்திய திறமை கொண்ட நிவேதன் ராதாகிருஷ்ணனை ஆஸ்திரேலியர்கள் உச்சி முகர்ந்து வரவேற்று வருகின்றனர்.
கரீபியன் தீவுகளில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி வரை இந்திய அணிக்கு முன்னேறியது. அதே தொடரில் சத்தமே இல்லாமல் சாதித்து இருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் நிவேதன் ராதாகிருஷ்ணன்.
ஆனால், அவர் ஆடியது ஆஸ்திரேலிய அணியில். நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்து முடிந்த 3 வது இடத்துக்கான போட்டியில் தனது ஆல்ரவுண்ட் திறமையால் ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைத்திருக்கிறார் நிவேதன். தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தானை சுருட்டிய அவர், பேட்டிங்கில் 66 ரன்களை ரன்களை குவித்து ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.
இரண்டு கைகளிலும் பந்துவீசும் அசாத்திய திறமை கொண்ட நிவேதன் ராதாகிருஷ்ணனை ஆஸ்திரேலியர்கள் உச்சி முகர்ந்து வரவேற்று வருகின்றனர். ஆனால், அவர் கிரிக்கெட்டை கற்று, விளையாடி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது எல்லாம் சென்னை மண்ணில்தான்… கிரிக்கெட் வீரரான தனது தந்தை அன்புச்செல்வனிடம் பயிற்சிபெறத் தொடங்கிய நிவேதன், 6 வயதிலிருந்தே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
தனது 9 வது வயதில் 12 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடி 60 பந்துகளில் சதம் விளாசி ஊடகங்களில் செய்தியானார் நிவேதன். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்திய போட்டிகளில் பள்ளி பருவத்திலேயே பங்கேற்று பலரை புருவம் உயர்த்த வைத்தார். 2013 ஆம் ஆண்டு தனது 10 வயதில் குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த அவர் கிரிக்கெட்டையும் தமிழ்நாட்டையும் விடவில்லை.
யார் அந்த பையன்… நல்லா ஆடுறான் என முன்னணி வீரர்களே கேட்கும் அளவுக்கு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இடம்பிடித்தார்… 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் காரைக்குடி காளை, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக ஆடிய அவர், 2019 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வானார்.
கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணியின் நெட் பவுலராக இடம்பிடித்த நிவேதனை, ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியன் டைகர்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்… இரண்டு கைகளில் பந்துவீசும் திறன் மற்றும் அபாரமான ஆல்ரவுண்ட் திறனால் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் முத்திரை பதித்த நிவேதன் ராதாகிருஷ்ணன், ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்து சாதனைகளை படைப்பார் என்பதற்கு அவரது முந்தைய சாதனைகளே சான்று.