கட்டுரைகள்கல்விபுத்தகம்மறைக்கப்பட்டவை
Trending

15 வயதிற்குள் 15 ஆங்கில புத்தகங்களை எழுதி அசத்திய தமிழக மாணவி

13 வது வயதுக்குள் 8 புத்தகங்களை எழுதிய அவர் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 7 புத்தகங்களை எழுதி தனது வயதுடன் தான் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கையை சமன் செய்திருக்கிறார்.

Story Highlights
  • தொடக்கத்தில் டைப்பிங் செய்யவும், ஓவியம் வரையவும், கிராபிக்ஸ் டிசைனிங் செய்யவும் சிரமப்பட்ட சிறுமி சக்தி, அவற்றையும் முறைபடி கற்று தனது புத்தகத்துக்கான அனைத்தையும் தானே செய்து வருகிறார்..

இப்ப இருக்க பசங்க யாருங்க புத்தகங்கள படிக்குறாங்க… எல்லாரும் செல்போன்ல பப்ஜி விளையாடிட்டு இருக்காங்க.. என பலர் சொல்வதை கேட்டிருப்போம்… இத்தகைய கருத்துக்களை தகர்க்கும் வகையில், நாங்களும் வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வமாக இருக்கிறோம் என்பதை வெளியுலகிற்கு உணர்த்தி இருக்கிறார் ஈரோட்டை சேர்ந்த 15 வயது சிறுமி சக்தி ஸ்ரீதேவி…

புத்தகங்களை படிக்கவே நேரமில்லை என சொல்பவர்களுக்கு மத்தியில் தனது வயதுக்கு இணையாக 15 புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதி பிரமிக்க வைத்துள்ளார் அவர்… சிறுவயதில் அம்மா சொன்ன கதைகளை கேட்டு வளர்ந்த அவர், 8 வயதில் புத்தகம் எழுதத் தொடங்கியுள்ளார். Ballena the Ballet Dancer என்ற அவரது முதல் புத்தகத்துக்கு கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்து பல ஆங்கில புத்தகங்களை எழுதியுள்ளார்…

பள்ளி பாடங்களை செய்து முடித்த பிறகு கிடைத்த நேரத்தில் எல்லாம் புத்தகம் எழுதுவதை வாடிக்கையாக்கிக் கொண்டார் சக்தி… The kid who taught the way of living என்ற புத்தகத்துக்காக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை வழங்கிய கேடயம், இவரது எழுத்தாற்றலுக்கு பெரும் அங்கீகாரமாக அமைந்தது… இப்படி எழுத்தையே எதிர்காலமாகிக் கொண்ட சக்தி ஸ்ரீதேவிக்கு கொரோனா ஊரடங்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது.

13 வது வயதுக்குள் 8 புத்தகங்களை எழுதிய அவர் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 7 புத்தகங்களை எழுதி தனது வயதுடன் தான் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கையை சமன் செய்திருக்கிறார். சிறுகதை, காமிக்ஸ், கவிதை தொகுப்பு என இவர் எழுதிய ஆங்கில புத்தகங்கள் தமிழ் மற்றும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தொடக்கத்தில் டைப்பிங் செய்யவும், ஓவியம் வரையவும், கிராபிக்ஸ் டிசைனிங் செய்யவும் சிரமப்பட்ட சிறுமி சக்தி, அவற்றையும் முறைபடி கற்று தனது புத்தகத்துக்கான அனைத்தையும் தானே செய்து வருகிறார்… ஒரு எழுத்தாளராக தனது படைப்புகளை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க விரும்பிய சக்தி, தனது கவிதைகளை ஒலி வடிவில் இசையுடன் வெளியிடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

இதற்காக அவரே பாடலும் பாடி வருகிறார்… எழுதுவதோடு நிற்காமல், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வாசிப்பு பழக்கம் குறித்த விழிப்புணர்வையும் மாணவர்களிடம் ஏற்படுத்தி வருகிறார் சக்தி… மதிப்பெண்கள், நுழைவுத் தேர்வுகள், கோச்சிங் செண்டர்கள் என பிள்ளைகளை ஓய்வின்றி விரட்டிக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் தனது மகளின் திறமையை அறிந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர் சக்தியின் பெற்றோர்.

ஸ்மார்ட்போன், இணையதளம் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொண்டே அவற்றை குறை சொல்லி வரும் மக்கள், அதில் உள்ள பயன்களை கண்டறிந்து அதை முறையாக பயன்படுத்தினால் சக்தியை போல் சாதிக்கலாம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button