முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆட்சியாளரிடம் TNTJ மனு
பேரறிவாளன் விடுதலை போல முஸ்லிம் சிறை வாசிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று TNTJ-யினர் ஆட்சியாளரிடம் மனு அளித்துள்ளனர்.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போன்று முஸ்லிம் சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து தவ்ஹித் ஜமாஅத் நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளாா். முன்னாள் முதல்வா் அண்ணாவின் 113-ஆவது பிறந்த நாளையொட்டி, நீண்டகாலம் சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனை வாசிகளை மனிதநேய அடிப்படையில் முன் விடுதலை செய்யப்படுவாா்கள் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.
அதில், வகுப்புவாத, மத மோதல்களில் ஈடுபட்டு கைதானவா்கள் முன் விடுதலை பெற இயலாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. கருணை என்று வரும்போது மதம் என்ற பாரபட்சம் காட்டக்கூடாது. தமிழக அரசு புதிதாக பொறுப்பேற்றபோது வெளிவந்த அந்த அரசாணை இஸ்லாமியா்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அந்த அரசாணையை திருத்தி 38 முஸ்லிம் சிறை வாசிகளையும் விடுதலை செய்ய ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தோம். சிறுபான்மை சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையான 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறை வாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.