உலகம்கட்டுரைகள்பொருளாதாரம்

ஒரு காலத்தில் எப்படி இருந்த நாடு? இலங்கை பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன காரணம்? இந்தியாவுக்கு ஆபத்தா?

கொழும்பு: இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-ல், ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பணக்கார நாடாக இலங்கை இருந்தது. 1970-ல் அமைந்த இடது கூட்டணி அரசு முற்றாக இலவசக் கல்வி, இலவச மருத்துவம், கூட்டுறவு முறையில் உணவுப் பங்கீடு என ஆசியாவிலேயே சிறந்த சமூகநல அரசாக இலங்கையை உருவாக்கியது. 1980-ல் உலகிலேயே வாழ்க்கைச் செலவு குறைந்த நாடுகளின் வரிசையில் முதலாவதாக இலங்கை இருந்தது. ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கையுடன் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு மெல்ல மெல்லச் சரியலாயிற்று. யுத்தம் அதை இன்னும் தீவிரமாக்கியது.
வியட்நாம் நிலை
திறந்த பொருளாதாரக் கொள்கை, சுதந்திர வர்த்தக வலயம், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பன்னாட்டுக் கொள்ளை நிறுவனங்களுக்கு நாட்டைத் திறந்துவிட்ட எல்லா மூன்றாமுலக நாடுகளிலும் இந்த வீழ்ச்சி நடந்திருக்கிறது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, திறந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்ட தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா போன்ற ஏழு தூரகிழக்கு ஆசிய நாடுகளை முதலாளிய ஆதரவாளர்கள் ‘ஏழு பொருளாதாரப் புலிகள்’ எனப் புகழ்ந்த வாயை மூட முன்பே, அவை பெரும் பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்தது நமக்கு ஞாபகமிருக்கிறது.
இலங்கையின் மீதுள்ள அழுத்தம்
திறந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும், பன்னாட்டு நிறுவனங்களும் மூன்றாமுலக நாடுகளிகளின் மீது பல்வேறு அழுத்தங்களைப் போட்டுப் பணிய வைக்கின்றன. வரலாற்றுரீதியாகவே தேசிய முதலாளித்துவ அரசாக உருவாகாமல், வெறும் தரகு முதலாளித்துவ அரசாக வெம்பிப் பிறந்த இலங்கை போன்ற அரசுகளுக்கு முதலாளியம் வேறு தெரிவுகளை விட்டு வைக்கவில்லை.
சீனாவுக்கு விற்ற ராஜபக்‌ஷே சகோதரர்கள்
இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி திடீரென ஏற்பட்டதல்ல. திறந்த பொருளாதாரக் கொள்கை கடந்த நாற்பது வருடங்களாக உருவாக்கி வந்த படிப்படியான சீரழிவு இது. ஏற்பட்டுக்கொண்டிருந்த வீழ்ச்சியை மேலும் துரிதமாக்கியவர்கள் ராஜபக்ச சகோதரர்கள். அவர்கள் சிவப்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக்கொண்டே இலங்கையைத் துண்டுபோட்டுச் சீன நிறுவனங்களுக்கு விற்றுத் தள்ளிய வேகம் சீனாவையே வியக்க வைத்தது.
இனியும் ஆபத்து உள்ளது
இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைக் காரணம் காட்டி இனி மேலும் அழுத்தங்கள் பன்னாட்டு நிறுவனங்களாலும், உலக வங்கியாலும், சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளாலும் இலங்கை மீது திணிக்கப்படும். முதல் வெட்டு சமூகநலத் திட்டங்களின் மீதே விழும். இலவச மருத்துவம், இலவசக் கல்வி, உணவு மானியம் எல்லாவற்றையும் படிப்படியாகக் குறைத்து இல்லாமலாக்குமாறு கட்டளையிடப்படும். அரசு நிறுவனங்களான போக்குவரத்து சபை, மின்சார சபை போன்றவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்க ஊக்குவிக்கப்படும். குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழுதாக விற்கப்படும்.
அன்றே கணித்த இடதுசாரிகள்
உண்மையில், இந்த நிலை ஏற்படும் என்பதை இலங்கையின் இடதுசாரி அறிஞர்கள் நீண்டகாலமாகவே சொல்லி வந்திருக்கிறார்கள். குறிப்பாக ‘சோசலிஸ சமத்துவக் கட்சி’ இது குறித்து ஏராளமான நூல்களையும் ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் மூன்று மொழிகளிலும் பல பத்து வருடங்களாக வெளியிட்டு வருகிறது.
மீண்டு வருமா இலங்கை?
இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டாலன்றி, இந்த வீழ்ச்சியிலிருந்து இலங்கையால் எழுந்து வர முடியாது. அத்தகைய ஒரு பொருளாதாரக் கொள்கை மாற்றத்தைச் சாதிக்க நினைக்கும் வெனிசுலாவின் சாவேஸ் போன்ற ஒரு தலைவர் இலங்கையில் உருவாகி ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும் உலக முதலாளித்துவம் இலங்கையை உலகப் பொருளாதார அச்சிலிருந்து விலக்கி வைத்துத் தண்டிக்கும்.
உலக நாடுகளுக்கு எச்சரிக்கை
இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் எழுச்சி ஆட்சியாளர்களுக்கும், இனிவரப் போகும் ஆட்சியாளர்களுக்கும் நிச்சயமாகவே ஒரு பலத்த எச்சரிக்கையையும் அழுத்தத்தையும் கொடுத்திருக்கிறது. இலங்கையின் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்படும்வரை வெகுமக்களின் இந்த விழிப்புத் தணிந்துவிடக் கூடாது என்று சொல்வதைக் காட்டிலும், இனிக் காலம் பூராவுமே இத்தகைய விழிப்புடனேயே இருக்க வேண்டியிருக்கும்.
எழுதியது: ஷோபா சக்தி
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button